780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல்

🕔 March 6, 2022

சுமார் 780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை செய்யும் பிரிவினர் தற்போது வரை கைப்பற்றியுள்ளதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக சொத்து குவித்த 1100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து 325 விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும், தற்போது, ​​கிட்டத்தட்ட இந்தப் பிரிவினரால் 780 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பணம் தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவருக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில், அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அந்த நபரின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் சம்பாதித்த பிற சொத்துக்கள் குறித்து இந்தப் பிரிவு விசாரிணை மேற்கொள்ளும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கீழ் ‘சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு’ அமைக்கப்பட்டது.

பணம் தூய்தாக்கல், மோசடிகள் மற்றும் போதைப்பொருள்கள் மூலம் சம்பாதித்த அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தல் இதன் நோக்கமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்