வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி

🕔 March 2, 2022

மின்வெட்டு நாளை மறுதினம் (05) முதல் இடம்பெறாது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தப் பணிப்புரையை அவர் விடுத்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் – மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும்.

எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, அமைச்சர்களான காமினி லொக்குகே, உதய கம்மன்பில, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கியின் ஆளுநர், எனது செயலாளர், எனது தலைமை ஆலோசகர், துறைசார் அமைச்சுகள், ராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்