பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

🕔 February 15, 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கை மத்தியஸ்த சபைக்கு அனுப்புமாறு நீதவான் அண்மையில் உத்தரவிட்டார்.

இதன்படி, பதுளை மத்தியஸ்த சபையில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து சாமர சம்பத் தசநாயக்க, மேற்படி வழங்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதவான் சமிந்த கருணாதாஸ தெரிவித்தார்.

எனினும் அதிபர் பவானி ரகுநாதன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

என்ன நடந்தது?

மாணவியொருவருக்கு பதுளை தமிழ் மகளிர் கல்லூரியில் அனுமதி வழங்குமாறு, அப்போதையை முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, அதிபர் பவானி ரகுநாதனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், கல்வி அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமையயே தன்னால் நடந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்து, முதலமைச்சரின் வேண்டுகோளை அதிபர் நிராகரித்திருந்தார்.

இதனையடுத்து, தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அதிபரை அழைத்த முதலமைச்சர், அங்கு அவரை முழந்தாழிடச் செய்ததாக, பொலிஸ் நிலையத்தில் அதிபர் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முதலமைச்சர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் 2018ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றது.

Comments