
நாடாளுமன்ற உறுப்பினர்களக்கான மாதிவெலயில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அனுமதியின்றி தங்கியிருந்தமைக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறியதற்காக, 08 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யத் தவறியமைக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, இவர்கள் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.
உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான முடிவுக் காலத்தில், அங்கிருந்து வெளியேறத்த தவறினால், நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் அறவிடப்படும்.
இந்த நிலையில் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களைச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.பி.க்களிடம் இரண்டாவது முறையாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிர்வாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த 08 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் புறக்கணித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



