செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி

🕔 January 16, 2022

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவரை அங்குள்ள விரிவுரையாளரொருவர் பாலியல் உறவுக்கு அழைத்தமையினை அடுத்து, குறித்த மாணவி தனது படிப்பை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.

அறபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த மேற்படி விரிவுரையாளர், அந்தப் பீடத்தில் கல்வி பயிலும் முதலாம் வருட மாணவியொருவருடன் ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவரை பாலியல் உறவுக்கும் அழைத்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து வெளியேறி வெளியில் சென்று தங்கியிருந்து, இது தொடர்பில் பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இதனால், பயந்து போன குறித்த விரிவுரையாளர் – அந்த மாணவியைத் தொடர்பு கொண்டு கெஞ்சி, காலைப்பிடிப்பதாகச் சொல்லி மன்னிப்புக் கோரியிருக்கின்றார்.

இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆரம்ப கட்ட நடவடிக்கையினை மேற்கொண்ட பல்கலைக்கழக பேரவை, மேற்படி விரிவுரையாளரை தற்காலிகமாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதோடு, இது தொடர்பில் விசாரித்து அறிக்கையொன்றினை வழங்குமாறு, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது.

இந்தப் பின்னணயில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றும் முயற்சியொன்றில், அவருடன் இணைந்து பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் சிலர் மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி விரிவுரையாளருக்கு சாதமாக – குறித்த மாணவியிடமிருந்து கடிதமொன்றைப் பெற்றுள்ளதோடு, அதன் மூலம் விரிவுரையாளரைக் காப்பாற்றும் முயற்சிகளில் பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் சிலர் ஈடுபட்டுவருவதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதாக அவ்வப்போது கதைகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சியில் உயர் கல்வி அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஒரு தடவை உரையாற்றும் போது; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் அங்குள்ள ஆண் விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கோருவதாக குற்றஞ்சாட்டியிருந்தமையும், அதற்கு அப்போதைய உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம், எதுவித எதிர்வினைகளையும் வெளிப்படுத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கதைகளின் மத்தியிலேயே, தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியொருவரை, அங்குள்ள விரிவுரையாளர் ஒருவர் செக்ஸ்ஸுக்கு அழைத்திருக்கிறார்.

ஆசிரியர் குறிப்பு: குறித்த மாணவியுடன் விரிவுரையாளர் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவுகள் ‘புதிது’ வசம் உள்ளன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் தொடர்பில் ‘புதிது’ விரைவில் அம்பலப்படுத்தும். அதேவேளை, அவரைக் காப்பாற்றுவதற்கு தொடர்ச்சியாக பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் முயற்சிப்பார்களாயின் அவர்களின் விவரங்களையும் ‘புதிது’ வெளியிடும்.

Comments