இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

🕔 December 12, 2021

– மரைக்கார் –

‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது.

‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

குறித்த அமைப்பின் தலைவராக அக்கரைப்பற்று மாநர சபையின் உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் பிரமுகருமான எஸ்.எம். சபீஸ் பதவி வகித்திருந்தார்.

இந்த நிலையில், இவ்வருடம் 08ஆம் மாதம் 11ஆம் திகதியிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வக்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் என்பவர், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்/செயலாளருக்கு விலாசமிட்டு அனுப்பியிருந்த கடிதமொன்றில்; ‘எந்தவொரு அமைப்பையோ, நிறுவனத்தையோ, சங்கத்தையோ, சம்மேளனத்தையோ பள்ளிவாசல் என்ற பெயருடன் உருவாக்குவதற்கு அல்லது நடத்துவதற்கு அனுமதியில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அம்பாறை மாவட்டத்துக்கான பள்ளிவாசல் குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், குறித்த பள்ளிவாசல் குழு ஸ்தாபிக்கப்படுவதுடன் இதுவே சட்ட ரீதியான அமைப்பாக செயற்படும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தை இடைநிறுத்துமாறும், எவ்வித நிருவாகத் தெரிவுகளையும் நடத்த வேண்டாமெனவும், வக்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, ‘அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் அமைப்பு சட்ட ரீதியற்றது என்பதும், அந்த அமைப்புக்கான நிருவாகம் தற்போது இல்லை என்பதும் தெளிவாகிறது.

ஆயினும், அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எனும் அடையாளத்தை எஸ்.எம். சபீஸ் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருவதோடு, தமது கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, சில மாதங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அப்போதைய அத்தியட்சகருக்கு எதிராக, சுகாதார அமைச்சுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில், சம்மேளத்தின் செயலாளருடைய கையொப்பத்தை – தலைவராகச் செயற்பட்ட எஸ்.எம். சபீஸ் மோசடியாக வைத்தமை அம்பலத்துக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகமொன்றில், இன்று (12) வெளியான செய்தியொன்று.

தொடர்பான செய்தி: வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்