தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

🕔 December 11, 2021

ம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினை அடுத்து, அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

பொத்துவில் முகுதுமகா விகாரையின் விகாரதிபதி தலைமையில், அதிகாலை வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரி. சுபோஸ்கரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு, இதற்கு முன்னரும் இரு தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு மக்கள் வெளியிட்ட எதிர்ப்பினை அடுத்து, அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் சுபோஸ்கரன் கூறினார்.

இந்த நிலையில் இன்றைய தினம்ட சங்கமன்கண்டி பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பதட்டநிலையை அடுத்து, அங்கு பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர்.

இதன்போது குறித்த சிலையை வைப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் உரிய அனுமதி பெறப்படவில்லை என, அங்கு வந்திருந்த அரச அதிகாரிகளிடம் கூறியதாகவும் பிரதேச சபை உறுப்பினர் சுபோகரன் தெரிவித்தார்.

இதேவேளை, பொத்துவில் பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறாமல் சங்கமன்கண்டியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றுமாறும் கோரி, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை தாம் பதிவு செய்துள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் ரி. விஜயசேகரன் பிபிசியிடம் கூறினார்.

இந்த நிலையில் சிங்கள மக்களைக் குடியேற்றுவற்காகவே, நூறு வீதம் தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டியில் இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் என்கிறார் பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசார் பி. பார்த்திபன்.

முதலில் சிலையை வைப்பது, பிறகு பௌத்த விகாரையை அமைப்பது, அதன் பின்னர் விகாரையைச் சுற்றி சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பிப்பதுதான் – இந்த சிலை வைப்பின் நோக்கம் என மக்கள் கூறுகின்றனர் என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

இவ்வாறு தீவிர எதிர்ப்பினை மக்களும், மக்கள் பிரதிநிதிகளம்ட வெளியிட்டமையினை அடுத்து, குறித்த சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக – பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க, மக்கள் தமது எதிர்ப்பை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாகவும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது விட்டால், தமது எதிர்ப்பு தொடரும் எனவும் பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பார்த்திபன் மேலும் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்