வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு

🕔 December 10, 2021

நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வரவு – செலவுத் திட்டத்துக்குக் கிடைக்கப் பெற்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த நிலையில், அந்தக் கட்சிகளின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நசீர் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

அதேபோன்று மக்கள் காங்கிரஸின் அலி சப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். முஷாரப் ஆகியோரும் ஆதரித்து வாக்களித்தனர்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போது, அதில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் கலந்து கொள்ளவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமேன முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்திருந்தமை குறிப்பிடப்பிடத்தக்கது.

Comments