சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது

🕔 December 8, 2021

டகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸிலுள்ள ஷார்ல் த கோல் விமான நிலையத்தில் காலித் ஏத் அலோடைபி என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சௌதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை தவறான அடையாளத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் கொலையில் தொடர்புடையவர்கள் சௌதி அரேபியாவில் தண்டனை பெற்றுவிட்டார்கள் என்றும் ஒரு சௌதி அதிகாரி பின்னர் தெரிவித்தார்.

“33 வயதான அலோடைபி, சௌதியின் முன்னாள் அரச காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொந்தப் பெயரில் பயணம் செய்துள்ளார். மேலும், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று வானொலியொன்று தெரிவித்துள்ளது.

சௌதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோக்ஜி, ஒக்டோபர் 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

சௌதி அரேபியாவின் முன்னாள் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரான கஷோக்ஜியை, நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப்பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சௌதி அரேபியா கூறியுள்ளது.

ஆனால், சௌதி அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் அவர்கள் செயல்பட்டதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சௌதி அரேபியாவின் ஆட்சியாளரான இளவரசர் முகமது பின் சல்மானின் நற்பெயரையும் சேதப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லையென்று மறுத்துள்ளார்.

சௌதி நீதிமன்றம், 2019-ம் ஆண்டு இந்தக் கொலையில் தொடர்புள்ளவர்கள் என்று பெயரை வெளியிடாமல் எட்டு பேருக்குத் தண்டனை வழங்கியது. அவர்களில் ஐந்து பேர் கொலையில் நேரடியாகப் பங்கேற்றதாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், மரண தண்டனை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் மூன்று பேருக்கு, குற்றத்தை மறைத்தமைக்காக 07 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சௌதியின் விசாரணை, “நீதிக்கு எதிரானது” என்று கூறிய அப்போதைய ஐ.நா-வின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னெஸ் காலமர்ட் அதை நிராகரித்தார்.

2019-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கஷோக்ஜி, முன்கூட்டியே திட்டமிட்ட கொலைக்குப் பலியானார். இதற்கு சௌதி அரசே பொறுப்பு” என்று காலமர்ட் தெரிவித்தார்.

கஷோக்ஜியின் கொலைப் பிறகு சௌதி இளவரசரைச் சந்தித்த முதல் பெரிய மேற்கத்திய தலைவர் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோங். அவருடைய சந்திப்பு நிகழ்ந்து அடுத்த சில நாட்களில் அலோடைபியின் இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்