பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

🕔 December 5, 2021

பாகிஸ்தான் – சியால்கோட்டில் இலங்கையர் பிரியந்த குமார தியவதன கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில், அதன் செயலாளர் அஷ்சேக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியால்கோட் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்டதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்களை கைது செய்து, அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகளை தாம் பாராட்டுவதாகவும், இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அத்துடன் எங்களின் கவலையையும் பிரார்த்தனைகளையும் மரணித்தவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்”.

“உலகளாவிய மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்