புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

🕔 December 1, 2021

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் இந்த ரகசிய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் வருத்தமளிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமது அமைச்சின் அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு சட்ட அலாக்கத் தரப்பினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதுக்குடியிருப்புப் பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொகைத் தங்கம் நீதிமன்ற உத்தரவின் பேரில் நொவம்பர் 25ஆம் திகதி தோண்டப்படவிருந்தது.

இருந்தபோதும், குறித்த வாரத்தில் பிரதேசவாசிகள் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவு கூர்ந்ததால், தோண்டும் வேலைகளற் டிசம்பர் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அந்தப் பகுதி வைக்கப்பட்டுள்ளது.

நொவம்பர் 23ஆம் திகதி, இரு அமைச்சுக்களின் செயலாளர்களும், அப்பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம், தாங்கள் விரைவில் அங்கு வரவிருப்பதாகவும், அவர்கள் வந்தவுடன் அவரைச் சந்திப்போம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை அவரின் உத்தியோகபூர்வ இடத்துக்குச் சென்று சந்தித்த அவர்கள், நொவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர், குறித்த பகுதியில் தோண்டுவதற்கு செய்வதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாகவும், அதனை ரகசியமாக நடத்துவதற்கு அவரின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, இரண்டு அமைச்சின் அதிகாரிகளும் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தார்களா என்பதை அறிய முல்லைத்தீவு பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.

வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்