பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

🕔 October 26, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பொருத்தமான உறுப்பினர்களை மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களாக தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே ஐந்து பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. இது தொடர்பான முதலாவது நேர்காணல் நாளை நடைபெறவுள்ளது. .

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளுக்கான பரிசீலனைக்காக 25 மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் விண்ணப்பங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளன. சுமார் 300 விண்ணப்பதாரர்களை புதன்கிழமை காலை 9.00 மணிக்கு, கட்சி அலுவலகத்தில் நேர்முகத் தேர்வுக்காக ஆஜராகுமாறு நாங்கள் கேட்டுள்ளோம்.

படித்த இளைஞர்களை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்படும். மாவட்ட அமைப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அரசியலில் உள்ள அனுபவமும் கருத்தில் கொள்ளப்படும். இருந்தபோதும், ஊழல் குற்றச்சாட்டுகள், குற்றச் செயல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட, சமூகத்தில் நல்ல குணம் கொண்டவராக இருப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பொறுப்பான பதவிக்கும் தெரிவு செய்யப்படுவதற்கான முதன்மையான தகுதியாகும்” எனவும் மேற்படி பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான நேர்காணல் குழுவில், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் சில்வா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்