பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு

🕔 September 28, 2021

யங்கரவாத தடுப்பு சட்டத்தை பாவிப்பதன் மூலம், அரசியல் ரீதியாக பலரைப் பழி வாங்குவதற்கான முயற்சி, மிக வெளிப்படையாக நடைபெறுகிறது என, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (28) கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்த விடயங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களை தகுந்த காரணங்களின்றி, வேண்டுமென்று சோடிக்கப்பட்ட காரணங்களைக் காட்டி, ஒன்றரை வருடகாலம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுத்து வைத்திருப்பது – வேண்டுமென்ற பழி வாங்கும் முயற்சி என்பதையும் அது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கின்ற பிரேரணையிலும் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றியும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

மிக விரைவிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டு, பின்னர் அவருடைய வழக்கை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். ஆனால், அதனை அவர்கள் தடுத்து வைத்திருப்பது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மோசமாகவும் தங்களுடைய தேவைகளுக்காகவும் பாவித்துள்ளமையினாலாகும் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இதேபோன்று நிறைய இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். போதிய காரணங்களின்றி ‘பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டுள்ளார்கள்’ எனச் சொல்லி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் பெண்கள் என்று பலரையும் உரிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவிடத்து, அவர்களை விடுவிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

இதேபோல முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை சமூகத்தில் முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதையும் மீறி இந்த அரசாங்கம், முஸ்லிம்களுக்கென இருக்கின்ற தனியான சட்ட நடைமுறையை வேண்டுமென்று தலையிட்டு, இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விவகாரத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் நாம் மிகத் தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

அதே நேரம் தேவையற்ற முறையில் அரசாங்கம் வேண்டுமென்று சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கின்ற விவகாரமாக, இது மாறி விடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக் கூடாது என்ற விஷயத்தையும் தெளிவாக முன்வைத்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்