அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

🕔 September 28, 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில் அவர் இந்த விடயத்தினை நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் குறிப்பிடுகையில்;

“டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட உணவு பொருட்களை அரசாங்கமே பொறுப்பெடுத்து – நாட்டுக்குள் கொண்டுவந்து பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுங்கள்” என, ‘சதொச’ என்ற அரச நிறுவனத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தாராம்.

ஆகவே துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலன் ‘சதொச’வின் ராகம களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், ‘பில்’ (பற்றுச் சீட்டு) கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= எனும் கணக்கில் கொடுக்கப்பட்டது.

இப்படி நள்ளிரவில் விற்பனைசெய்த அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை, அதே ‘சதொச’ நிறுவனம் – கிலோ 445/= எனும் கணக்கில் மீண்டும் கொள்வனவு செய்துள்ளது.

அதன் பின்னர் வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ 500 ரூபாவுக்கும் மேல், அப்பாவி வாடிக்கையாளர் பொது மக்களுக்கு நாடு முழுக்க உள்ள ‘சதொச’ முகவர் நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது.

இதுதான், ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’. இதற்கு முன்னர் இதேபோன்று சீனி, பால்மா, மாவு, உளுந்து ஆகிய கொள்கலன்கள் விற்கப்பட்டதாக, இப்போது இந்த நடு ராத்திரி கொள்ளைக்கு துணை போக முடியாமல், மனம் நொந்து, இந்த நாட்டை ‘காப்பாற்ற’ வந்த ‘தேசிய வீரர்களின்’ நிர்வாகத்திலிருந்து, பதவி விலகும், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குநர் துசான் குணவர்தன கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தான் தெரிவித்த இந்த விடயங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் மனோ பதிவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்