காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு

🕔 September 3, 2021

– நூருல் ஹுதா உமர் –

ன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார்.

காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம் முதலே வெளியிட்டு வரும் நிலையிலேயே தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

“நீதி, தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு எனது குரல் எப்போதும் ஓங்கியொலித்துள்ளதுடன், மக்கள் எங்களின் சுயட்சை குழுவுக்கு எந்த நோக்கத்துக்காக வாக்களித்து தெரிவு செய்தார்களோ, அந்த பணியை சிறப்பாக செய்துவருகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழல்களுக்கு துணைபோகாமல் தனித்து நின்று மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் தன்னை ஓரங்கட்டி காரைதீவை சாப்பிட்டு ஏப்பமிட நினைப்பவர்கள் யார் என்பதை காரைதீவு மக்கள் நன்றாக அறிவர் எனவும் குமாரஸ்ரீ கூறினார்.

“தீய சக்திகளின் ஜனநாயக விரோத செயல்களுக்கும், ஊழலுக்கும் துணைபோக மறுக்கும் என்மீது பொய்யான கற்பனை கதைகளை தவிசாளர் அடிக்கிக் கொண்டிருக்கிறார். தவிசாளர் வழங்கும் சில சலுகைகளை கண்டு மயங்கிய சிலரும் – போலியான துண்டுப்பிரசுரங்கள், கற்பனையான ஊடக அறிக்கைகள், சமூகவலைத்தள பதிவுகளென அதற்கு பக்கவாத்தியம் இசைக்கிறார்கள். அவர்களுக்கு சட்டம் தன்னுடைய கடமையை செய்யும் என நம்புகிறேன்”.

“ஊழல்வாதிகளுக்கும், இனவாத, பிரதேசவாத செயற்பாடுகளுக்கும் துணைபோகும் ஈனச்செயலை யாருக்காகவும் நான் எப்போதும் செய்யப்போவதில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்