சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

🕔 May 31, 2015

Hakeem - Dhelthota - 01சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும்  பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.

இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல்,  தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த போதிலும், சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாத வகையில், தற்போதைய ஆட்சியாளர்கள் புதியதொரு தேர்தல் முறைமையை கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கையின் பின்னணியில்தான் – அவர்களோடு பக்குவத்தோடும் நம்பிக்கையுடனும் சிலநகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது மேலும் கூறினார்.

தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரப்புக் கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு, பட்டமளிப்புவிழா மற்றும்  இப்றாஹிமியா தொழில்நுட்ப கல்லூரி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும்

“மிக விரைவில் ஒரு தேர்தலை  எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். இந்த நிலையில், இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினால், ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்று அமைய வேண்டிய தேவையுள்ளது.

ஒவ்வொரு தடவையும் நாடாளுமன்றம் கூடுகின்றபோது, பெரிய களேபரம்தான் நடக்கின்றது. எதையும் உருப்படியாக செய்யவிடாமல், முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் குழப்ப நிலையை உருவாக்குகின்றார்கள். போதாக்குறைக்கு அரசியலமைப்பில் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை அவசர அசரமாகத் திணிப்பதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் தற்பொழுது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, தற்பொழுதுள்ள தேர்தல் முறையை விடவும், இன்னொரு தேர்தல் முறையைக் கொண்டு வரும் விடயத்தில், பல சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றது.

இருந்தபோதும்,  இந்த நாட்டின் அரசியல் தலைமைத்துவங்களான ஜனாதிபதியும் பிரதமரும்,  ஆட்சி மாற்றத்திற்குச் சிறுபான்மைச் சமூகங்கள் செய்த பங்களிப்பை மறந்து விடாமல், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல், ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் பின்னணியில்தான், நாங்கள் அவர்களோடு – மிகபக்குவமாகவும், சாணக்கியமாகவும், நேர்மையாகவும் சிலநகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.  அவர்களுடைய சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவையாக இருந்த போதிலும், இதை அவர்கள் செய்வார்கள் என எண்ணுகின்றோம்” என்றார்.Hakeem - Dhelthota - 02Hakeem - Dhelthota - 03

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்