கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

🕔 August 14, 2021

– அஹமட் –

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது.

அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான அகமட் சக்கி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

வீதி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் கிராமிய வீதி அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு அமுல்படுத்தும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வீதி நிர்மாண வேலையே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, ராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் மேயர் அஹமட் சக்கி உட்பட அப்பகுதி மாநகர சபை உறுப்பினர்களின் படங்கள் வரை உள்ளடக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் படம் அந்தப் பதாகையில் தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசாங்கத்தை தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ஆதரித்து வருகின்ற போதிலும், அவருக்கு இதுவரை எந்தவொரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட போது – அமைச்சர் பதவிகள் வழங்கும் நிகழ்வுக்குச் சென்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, எந்தவித அமைச்சர் பதவிகளும் கிடைக்காமல், ‘வெறுங்கை’யுடன் அந்த நிகழ்வின் இடையில் அங்கிருந்து வெளியேறியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி வீதி நிர்மாண வேலைத் திட்ட ஆரம்ப நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில், ஜனாதிபதியின் படம் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் ஹாபிஸ் நசீர் எம்.பியின் தலைமையில் நடைபெறும் வேலைத்திட்டம் தொடர்பான விளம்பரப் பதாகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்