பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு

🕔 August 9, 2021

லக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் அதிகார சபை அதனை நிராகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கப்பலுக்கான செலவு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவும் இதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் ஒரு கிலோகிராம் பால்மா 4.20 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எனவே, அரசாங்கத்தின் நிர்ணய விலையின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவினை விற்பனை செய்தால், 270 ரூபா நட்டம் ஏற்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் நாளாந்தம் பாவனைக்காக 250 மெற்றிக் டொன் பால்மா அவசியமாகின்றது.

இதனடிப்படையில் மாதாந்தம் பால்மா இறக்குமதியாளர்களுக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்