சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம்

🕔 July 28, 2021

கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளனர்.

சிறுவர் தொழிலாளர் நடவடிக்கை தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மேல் மாகாணத்தின் கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறுவர் தொழிலாளர்கள் மத்திய மாகாணத்தின் மலைநாட்டுப் பகுதியில் இருந்து – கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் மட்டக்குளிய மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுகளில் இரண்டு பொலிஸ் குழுக்கள் நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் நேற்று 30 வீடுகள் நேற்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை இன்றும் தொடர்வதாகவும் உளவுப் பிரவினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக பொதுமக்களிடம் ஏதேனும் தகவல்கள் இருந்தால், அவற்றினை 0112 433 333 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து வழங்குமாறும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்