போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம்

🕔 July 18, 2021

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரின் ஜனாஸாக்களை (பிரேதங்களை) முஸ்லிம்களுக்கான மையவாடிகளில் அடக்கம் செய்வதில்லை என, நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நிந்தவூர் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் மௌலவி எம்.எம். கமர்டீன் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் படி போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

  • போதைப் பொருள் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்துக்கான அனுமதி மறுக்கப்படும்.
  • ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் காரியங்களில் பள்ளிவாசல் தனது பங்களிப்பை வழங்காது.
  • முஸ்லிம்களை அடக்கம் செய்கின்ற அடக்கஸ்தலங்களில் இவர்களுடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட மாட்டாது.
  • இவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் இதே நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.
  • போதைப்பொருள்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் வீதிகள் தோறும் காட்சிப்படுத்தப்படும்.
  • இச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, சரியான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • போதைப் பொருள்களை விற்பனை செய்யும் வெளி ஊரைச் சேர்ந்தவர்கள், நிந்தவூரை விட்டும் வெளியேற்றப்படுவர்.

நேற்றைய திகதி (17) இடப்பட்டு, குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்