பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு

🕔 July 18, 2021
தூதுவரின் கடத்தப்பட்ட மகள் சில்சிலா

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள், அடையாளம் அறியப்படாத நபர்களால் வெள்ளிக்கிழமையற்று கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக, ஆஃப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களால் அவருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று, சனிக்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதர் நஜீபுல்லா அலிகைல் – மகள் சில்சிலா அலிகைல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இடை மறிக்கப்பட்டு கடத்தப்பட்டார் என்றும், பல மணிநேரம் கடத்தல்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்சிலா அலிகைல் ‘கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்’ என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது ஆப்கனிஸ்தான் வெளியுறவுத்துறை; இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவு பல வாரங்களாகவே மோசமாக உள்ளது.

இருபது வயதுகளில் இருக்கும் சில்சிலா தமது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது காருக்குள் நுழைந்து தாக்குதலாளிகளால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர் விடுவிக்கப்பட்ட பின்பு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது ‘மனிதத்தன்மையற்ற தாக்குதல்’ என்று தெரிவித்துள்ள தூதர் நஜீப் அலிகைல், தமது மகள் தற்பொழுது நன்றாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு, பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தூதுவர் நஜீபுல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவிக்கிறது.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்புகிறார் என்று, அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார்.

ஆஃப்கன் அரசு மற்றும் தலிபான் அமைப்பினர் ஆகியோருக்கு இடையே சமீப வாரங்களாக மோதல் தீவிரமாகி வரும் சூழலில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவிலும் கசப்புணர்வு அதிகரித்து வருகிறது.

தங்களது நாட்டில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் தருவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது.

மறுபுறத்தே, ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தங்கள் நாட்டை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

தூதுவர் நஜிபுல்லா அலிகைல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்