மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

🕔 July 18, 2021

மாடுகளை அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமைய செயல்படுமாறு, உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான 04 சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாடுகளை அறுப்பதை இலங்கையில் தடை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தார். இதற்கமைய மாடுகள் அறுப்பதைத் தடை செய்வதற்கு அமைச்சரவையில் இதற்கு முன்னர் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில், அனைத்து உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என ராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய செயல்படுமாறும் வேறு தீர்மானங்களை எடுப்பதிலிருந்து விலகி இருக்குமாறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளதாக அதன் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை அமைச்சின் செயலாளருடைய அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு, கொழும்பு மாநகர சபையின் கால்நடை மருத்துவருக்கு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஸினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்