சபீஸின் ‘கொரளி வித்தை’; மோசடிக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: எந்தக் கேள்விக்கும் பதிலில்லை

🕔 July 16, 2021

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக இருந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ், சம்மேளனக் கடிதத் தலைப்பில் சுகாதாரா அமைச்சின் செயலாளருக்கு மோசடியாக கடிதமொன்றினை எழுதியமையும், பின்னர் அது அம்பலமானமை பற்றியும் அறிவோம்.

பள்ளிவாசல் சம்மேளனதினர் யாருக்கும் தெரியாமல் எழுதிய அந்தக் கடிதத்தில் – செயலாளரின் கையொப்பத்தைக் கூட, மோசடியாக ‘ஸ்கேன்’ செய்து சபீஸ் போட்டிருந்தார்.

இதனை, அண்மையில் நடந்த பள்ளிவாசல் சம்மேளன நிருவாகக் கூட்டத்தில் சபீஸ் ஏற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அந்கத் கூட்டத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து, அதில் கலந்து கொண்ட நிருவாகிகள் வழங்கிய தகவல்களும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் ஒலி வடிவில் உள்ளன.

இந்த நிலையில், குறித்த மோடியைச் செய்த சம்மேளனத் தலைவர் சபீஸ்; ஊடகங்களுக்கு ஓர் அறிக்கையினை விடுத்திருக்கிறார். குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக அந்த அறிக்கையினை அவர் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், வார்த்தைகளால் அவர் ‘கொரளி வித்தை’ காண்பித்திருக்கின்றார்.

அந்த மோசடிக் கடிதத்தை அவர் ஏன் எழுதினார்? எதற்காக எழுதினார்? அல்லது அந்தக் கடிதத்தை அவர்தான் எழுதினாரா? சம்மேளனத்தினருக்குத் தெரியாமல் எழுத வேண்டிய அவசியம் என்ன? செயலாளரின் கையொப்பத்தை ‘ஸ்கேன்’ செய்து அந்தக் கடிதத்தில் போட வேண்டியேற்பட்டதன் அவசியம் என்ன? அல்லது அப்படி செயலாளரின் கையொப்பம் ‘ஸ்கேன்’ செய்து போடப்பட்டதாக செயலாளரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமைக்கு என்ன காரணம்? என்று – இவை எதற்குமே சபீஸின் அறிக்கையில் பதிலில்லை.

வெறுமனே வார்த்தைகளை எடுத்து ‘உருட்டி’ விட்டிருக்கும் அந்த அறிக்கையை, நமது ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அனுப்பி வைத்திருக்கிறார்.

இனி, சபீஸின் அந்த அறிக்கையை எந்தவித, கூட்டல் குறைத்தலுமின்றி வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

சபீஸின் உருட்டு அறிக்கை

அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவராய், எங்கள் மூலம் அனுப்பப்பட்ட ‘கடிதமும் அதன் சர்ச்சையும்’ என்று ஒரு நெடிய நாவலே எழுதிவிடலாம் என்ற அளவுக்குப் பூதாகரப் படுத்திவிட்டார்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துவங்கியவர்கள்.

இது சம்பந்தமாக எழுதியோ பேசியோ மேலும் மேலும் அழுக்குகளைப் பூசிக்கொள்வது, ஓர் அநாகரிகம் என்று அனுபவச் செல்வந்தர்களும் அறிவு ஜீவிகளும், ‘மஷூரா’ வின் போது அழுத்தமாய்ச் சொன்னார்கள். அதனால் என் உள்ளுணர்வும் அந்த நாகரிகமே அழகு என்றும் எற்றுக்கொண்டது.

நிச்சயமாக காலம் காத்திரமானது. அது வந்து சதிப் பெட்டகங்களைத் திறக்கும் என்பது திண்ணம். அதுவரை காத்திருப்பேன். நீங்களும் அதைப் பார்த்திருப்பீர். இன்ஷாஅல்லாஹ். ஆனால் என் திருப்திக்காகவும் சில திருத்தங்களுக்காகவும் என் நெஞ்சு தொட்டு காது வழி வந்த சேதி கேட்டு அவரவர் அவர்களுக்குள்ளே கலவரமாகி, வாய் வழியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கண்டித்தவர்களுக்கும், யதார்த்தம் அறிந்து சிலாகித்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டித்தவர்களுக்குள் நடுநிலைவாதிகளும் உளர். கெடுநிலைவாதிகளும் உளர். நடுநிலைவாதிகளுக்கு விளக்கமளிப்பது எனது கடமை ஆகவே, நடந்ததை விளக்கினேன்; தெளிந்தார்கள். அவசரப்பட்டோமோ? என்று கேட்டவர்களும் உண்டு. கெடுநினைவாதிகளுக்கு நான் என்னதான் தெளிவுபடுத்தினாலும் அவர்களின் ‘அஜண்டா’ தெளிவு பெறுவதில் இருக்கவில்லை என்பதை பல ஊசலாட்டங்கள் எனக்குத் துல்லியமாய் எடுத்தியம்பியது.

உண்மையில் அவர்களின் பிரத்தியேக நோக்கம் என் சமூக சேவைப் பயணத்தைத் தடுத்து, மக்கள் மத்தியில் என் பிம்பத்தைச் சிதைத்து, என்னைச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்டி, மூலையில் ஒடுங்கிக் கிடக்கச் செய்வதே.

இந்தக் கெடுநிலைவாதிகள் – விரல்விட்டு எண்ணக்கூடிய முரண்பாவம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின் பிரயத்தனங்கள் பலனளிக்காமல் போய்விட்டது. ஏற்றுவதும் இறக்குவதும் இறைவன் செயல் , அதை மண்ணாகப் போகும் மனிதன் செய்யநினைக்கிறான். தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்துகிறான்.

இந்த முரண்பாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமிடையில் என்னை நசுக்கி, எவ்வளவுதான் மூச்சிரைக்க வைத்தாலும், நான் களைத்துப் போகமாட்டேன். எல்லாச் சவால்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுமே என்ற நிகழ், எதிர்கால யதார்த்தை மனத்திடத்தில் ஆழ நட்டவனாகவும் அதை அழகுறச் செய்யும் தலைமைத்துவப் பண்புகளை எனக்குள் ஊன்றி இட்டவனாகவுமே தலைமைப் பதவியை ஏற்று கடமை புரிந்து வருகின்றேன்.

நான் எழுத்தில் கொடுத்தவாறு, அந்த வரையறைக் காலம் வரைக்கும் இதே மன பலத்துடனும் வழி நடத்தும் திறத்துடனும் நானிருப்பேன் என்ற சத்தியத்தை அல்லாஹ்விடம் அமானம் வைத்திருக்கிறேன். அவனிடத்தில் என் அபிமானம் இருக்கும். இன்ஷாஅல்லாஹ். காலைப்பொழுதின் மீது சத்தியமாக, இரவின் மீதும் சத்தியமாக என்று ‘வொழ்ழுஹா’ சூறாவில் உச்ச நேசத்திற்குரிய றசூலுல்லாஹ்வுக்கு அந்த நாயன் ஆறுதல் கூறுகிறான். கருணையைத் திருச்சொற்களாக்கி நபியவர்களைக் குளிர வைக்கிறான்.

அந்த வசனங்களில் அநேகரின் வாழ்க்கையோடு கூடிய யதார்த்தங்கள் இருப்பதில்லை. ஆனால் எனக்கும் என் நிலையில் இருப்போருக்கும் எங்கள் வாழ்க்கையின் நிஜங்களை மற்றும் தடங்களை தத்ரூபமாக்ச் சொல்கிறது அவ்வசனங்கள். அதனால் அவ்வப்போது ஓதி நான் ஆறுதல் கொள்வதுண்டு. குளிர்ச்சி பெறுவதுமுண்டு.

இந்தச் சூழ்நிலைக்கும் ‘வொழ்ழுஹா’வே எனக்கு ஒத்தடமிட்டுக்கொண்டிருந்தது. ஆகவே திண்ணமாக சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்ற இறைவாக்குகளை உடற் கவசமாக அணிந்திருக்கிறேன். அல்லாஹ்வின் உதவியுடன் நான் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன்.

தொடர்பான செய்தி: வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்