வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

🕔 July 13, 2021

– மரைக்கார் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிரை அந்த வைத்தியசாலையிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ் செய்த மோசடி அம்பலமாகியுள்ளது.

வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என, அச் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்சேய்க் எம்.ஏ. றஹ்மதுல்லா தெரிவித்துள்ளதோடு,அந்தக் கடிதத்தில் தனது கையொப்பம் மோசடியாக இடப்பட்டுள்ளது என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் இந்த மோசடி குறித்து தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் கூடிய அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நிருவாகக் கூட்டத்தில், இது தொடர்பில் பலத்த கண்டனங்கள் வெளியிடப்பட்டதோடு, நிருவாகத்தினருக்கு தெரியாமல் செயலாளரின் கையொப்பத்தை மோசடியாக வைத்து சுகாதார அமைச்சுக்கு கடிதத்தை எழுதியவர் யார் என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது.

மோசடியை ஏற்றுக் கொண்டார் சபீஸ்

பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டத்தில் எழுந்த கண்டனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாத நிலையில், குறித்த கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு – தானே அனுப்பியதாக – அங்கு வருகை தந்திருந்த பள்ளிவாசல்கள் சம்மேளத் தலைவர் எஸ்.எம். சபீஸ் ஏற்றுக் கொண்டார்.

அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளரின் கையொப்பத்தை ‘ஸ்கேன்’ செய்து – குறித்த கடிதத்தில் பதிவு செய்ததாகவும் இதன்போது சபீஸ் கூறியதாக, சம்மேளனத்தின் செயலாளர் றஹ்மதுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பெயரில் சபீஸ் இவ்வாறு அனுப்பிய கடிதத்தில் – செயலாளரின் கையொப்பத்தை அவர் மோசடியாக பதிவு செய்த போதிலும், அந்தக் கடிதத்தில் தலைவர் என அவரின் பெயரிடப்பட்ட இடத்தில் கையொப்பம் எதனையும் இடாமல் ‘கையொப்பம் இடப்பட்டது’ என அர்த்தப்படும் வகையில் ஆங்கிலத்தில் ‘Signed’ என மட்டுமே சபீஸ் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சம்மேளத்தைக் கலைக்க முடிவு

பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் சபீஸ் இவ்வாறு மாபெரும் மோசடியொன்றைச் செய்தமை அம்பலமானதை அடுத்து, அவரை அந்தப் பதவியிருந்து விலக்கும் பொருட்டு, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தற்போதைய நிருவாகத்தை கலைப்பதென, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அடுத்த மாதம் (ஓகஸ்ட்) 10ஆம் திகதி, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தற்போதைய நிருவாகத்தை கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

மோசடியாக கடிதம் எழுதிய எஸ்.எம். சபீஸ், அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்று 06 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அவரிடமிருந்த இந்தப் பதவி பறிபோகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறார் செயலாளர்

இந்த நிலையில், தனது கையொப்பம் மோசடியாக வைக்கப்பட்டமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தான் செய்த முறைப்பாடு குறித்து தொடர்ச்சியான நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்சேய்க் றஹ்மதுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக தனது கைபொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் மோசடியானது என்றும், அக்கடிதத்தில் தான் கையொப்பம் இடவில்லை என்பதையும் தெரியப்படுத்தி – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பவுள்ளதாகவும் செயலாளர் றஹ்மதுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் மேலும் கூறினார்.

நாங்களே அனுப்பினோம்: தொடரும் அயோக்கியத்தனம்

விடயங்கள் இவ்வாறிருக்க, சம்மேளனக் கூட்டம் நடைபெற்ற பின்னர், குறித்த கடித விவகாரம் தொடர்பில் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் சபீஸ்; அந்தக் கடிதத்தை ‘நாங்களே அனுப்பினோம்’ என குறிப்பிட்டுள்ளமை மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைமைப் பதவியை தவறாகப் பயன்படுத்தி, தான் தோன்றித்தனமாக – செயலாளரின் கையொப்பத்தை மோசடியாக வைத்து கடிதமொன்றினை அனுப்பிய சபீஸ், அதனை தான்தான் செய்ததாக சம்மேளன நிருவாகத்தினர் முன்னிலையில் ‘குற்ற ஒப்புதல்’ வாக்குமூலத்தினையும் வழங்கி விட்டு, இப்போது ‘நாங்களே அனுப்பினோம்’ என பன்மையில் குறிப்பிட்டுள்ளமையானது, இந்த மோசடியில் மீண்டும் பள்ளிவாசல் சம்மேளன நிருவாகிகளைக் கோர்த்து விடும் அயோக்கியத்தனமாகும் என, சம்மேளன நிருவாகியொருவர் தெரிவிக்கின்றார்.

யார் இந்த சபீஸ்?

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் கட்சியினுடைய – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரான சபீஸ், தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் உள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிரை அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு பிரதேசவாதத்துடன் அதாஉல்லா செயற்பட்டதாகவும், அதற்கு சபீஸ் துணைபோனதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை அதாஉல்லா தரப்பு மறுக்கின்ற போதும், வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பள்ளிவாசல் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் மோசடியான முறையில் சபீஸ் கடிதம் அனுப்பியமை அம்பலமானதை அடுத்து, வைத்திய அத்தியட்சகர் விவகாரத்தில் அதாஉல்லாவின் பின்னணி உள்ளமை மேலும் உறுதியாகியுள்ளது.

இடமாற்றம்

இவ்வாறான சூழலில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிர் – இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்து – அது தொடர்பான கடிதத்தினையும் அனுப்பி வைத்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச வாதம், அக்கரைப்பற்று சூழ்ச்சி அரசியல் ஆகியவற்றின் மூலம் பழி வாங்கப்படும் அட்டாளைச்சேனை பிரதேச அரச உயரதிகாரிகளின் பட்டியலில் டொக்டர் ஜவாஹின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த அயோக்கியத்தனத்துக்கு, காலம் ஒரு நாள் ‘மருந்து கட்டும்’ என்பதை மட்டும் இந்த இடத்தில் அழுத்திச் சொல்ல முடியும்.

தொடர்பான பதிவு: அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும்

சபீஸ் எழுதிய பேஸ்புக் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்