அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும்

🕔 July 11, 2021

– மரைக்கார் –

இடம்: அக்கரைப்பற்று
காலம்: 2013ஆம் ஆண்டு

அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்தக் கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த அதாஉல்லா; அப்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த டொக்டர் எம்.எம். தாஸிம் குறித்து – கருத்தொன்றை பதிவு செய்தார்.

“நமது வைத்தியசாலையின் அத்தியட்சகர் தாஸிம் தொடர்பாக, சிலர் அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றார்கள். அவர் ஊழல் செய்ததாகச் சொல்கின்றார்கள். ஆனால், ஒரு பாண் துண்டைக் கூட, வைத்தியசாலையிலிருந்து டொக்டர் தாஸிம் வெளியே கொண்டு சென்றதில்லை” என்று, தாஸிமுக்காக அதாஉல்லா அங்கு வக்காளத்து வாங்கிப் பேசினார்.

அப்போதைய வைத்திய அத்தியட்சகர் தாஸிம் குறித்து அதாஉல்லா இப்படிக் கூறிய மறுநாள்; ஊடகங்களில் தாஸிம் தொடர்பில் செய்தியொன்று வெளியானது. அது என்னவென்றால், ‘டொக்டர் தாஸிம் செய்த ஊழல் மோசடி காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், சுமார் 10 லட்சம் ரூபாவை அரசுக்கு டொக்டர் தாஸிம் திருப்பிச் செலுத்தினார்’ என்பதே அந்தச் செய்தியாகும்.

இந்த இடத்தில் டொக்டர் தாஸிம் குறித்து சற்றுக் கூற வேண்டும். அவர் அதாஉல்லாவுக்கு நெருக்கமானவர். வைத்தியசாலையையும், அதன் சொத்துக்களையும் அதாஉல்லாவின் அரசியலுக்காக தாஸிம் பயன்படுத்தினார். அதாஉல்லாவும் டொக்டர் தாஸிமும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள்.

அன்றைய காலகட்டத்தில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அப்போதைய வைத்திய அத்தியட்சகராக தாஸிம் பதவி வகித்த போது – அங்கு நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளின் பட்டியல் மிக நீளமானவை. அவற்றில் சிலவற்றை இங்கு வழங்குகின்றோம்.

01) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டது.

02) மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டிருந்த போதும், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை, வைத்தியசாலை ஆவணங்களில் அவை பற்றிய பதிவுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.

03) சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக – யுனிசெப் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

05) டொக்டர் தாஸிம் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 04 தடவை வெளிநாடு சென்றிருந்தார். அப் பயணங்களின்போது, அனுமதிக்கப்பட்ட விடுமுறையினை விடவும் 30 நாட்கள் அதிகமாக வெளிநாடுகளில் தங்கிருந்தார்.

06) அவ்வாறு வெளிநாட்டில் மேலதிகமாகத் தங்கியிருந்த 30 நாட்களும் கடமையில் இருந்ததாகக் காட்டியுள்ளதோடு, அந்த நாட்களுக்குரிய சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகள் மற்றும் பிரயாணக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றினைப் பெற்றிருந்தார். இவ்வாறு இவர் பெற்றுக்கொண்ட தொகையானது சுமார் 01 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவாகும்.

07) அப்போதைய வைத்திய அத்தியட்சகர் தாஸிம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு – அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு தனது குடும்பத்துடன் பயணிப்பதற்காக 08 தடவை வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டது. அந்த வகையில், அந்தப் பயணத்துக்காக வைத்தியசாலையின் நிதியிலிருந்து சுமார் 03 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

08) வைத்திய அத்தியட்சகர் தாஸிம் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனக்கு அனுமதிக்கப்படாத நிதியிலிருந்து சுமார் 02 மில்லியன் ரூபாவினை மோசடியாகப் பெற்றிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து, வைத்திய அத்தியட்சகர் தாஸிம் – மோசடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு தொகைப் பணத்தினை மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தினார்.

அவ்வாறு அவர் செலுத்திய தொகை 09 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாவாகும்.

இதனையடுத்து அரசசேவை ஆணைக்குழுவானது வைத்திய அத்தியட்சகர் தாஸிமை பணியிலிருந்து இடைநிறுத்தியதோடு, குற்றப்பத்திரத்தினையும் அவருக்கு வழங்கியது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை குற்றங்களையும் புரிந்த டொக்டர் தாஸிம், தற்போது அதே வைத்தியசாலையில் திட்டப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

டொக்டர் தாஸிம் – ஊழல், மோசடியில் ஈடுபடுகின்றார் என்று அன்றைய நாட்களில் அவருக்கு எதிராக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினுள் எதிர்ப்புகள் கிளம்பியபோதும், விசாரணைகள் நடந்த போதும், அவை வைத்தியசாலையின் உள்ளக விவகாரம் என்று கூறிவிட்டு, அதாஉல்லா அதில் தலையிடாமல் விலகியிருக்கவில்லை.

மாறாக டொக்டர் தாஸிமை ஊழல் மோசடியற்ற நபராகச் சித்தரிப்பதற்கு அதாஉல்லா தனது அரசியல் மேடைகளையும், அதிகாரத்தையும் அப்போது பயன்படுத்தினார்.

தனது கட்சிக்காரர் என்பதற்காகவும், தனது ஊர்க்காரர் என்பதற்காகவும் டொக்டர் தாஸிமை அப்போது அதாஉல்லா காப்பாற்ற முயன்றார்.

ஆனால், அக்கரைப்பற்றின் தற்போதைய வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைளைத் தீர்த்து வைப்பதற்கு அதாஉல்லா எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ‘கள்ள மௌனம்’ காத்து வருகின்றார்.

இத்தனைக்கும் டொக்டர் ஜவாஹிர் மீது குற்றம் சாட்டுவோர், அவருக்கு எதிராக எந்தவித ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குள் அரசியலை தேவையற்ற வகையில் டொக்டர் ஜவாஹிர் ஒருபோதும் கொண்டு வந்ததில்லை. ஆனால், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பதவியில் இருப்பவர்கள் ‘குசு’ விடுவதென்றாலும், தம்மைக் கேட்டு விட்டுத்தான் விட வேண்டுமென – அதாஉல்லா தரப்பு விரும்புகிறது.

இதற்கெல்லாம் பணிந்து போகாததால், வைத்திய அத்தியட்கர் ஜவாஹிர் மீது அரசியலும் அக்கரைப்பற்று பிரதேசவாதமும் தற்போது பாய்ந்திருக்கிறது.

ஆனால் வைத்திய அத்தியட்சகர் மீதான விவகாரத்தில் அரசியலோ, பிரதேசவாதமோ கிடையாது என்று கூறி, நாம் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டினை அதாஉல்லா தரப்பு மறுத்து வருகின்றது. அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் றாஸிக் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுதிய திறந்த மடலில் அந்த மறுப்பினைக் காண முடியும். (அது குறித்த செய்தியை ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல்’ எனும் இந்த சுட்டியில் காண முடியும்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடப்பது உள்ளகப் பிரச்சினை என்றும், அதில் தாம் தலையிட விரும்பவில்லை என்பது போலவும் – தேசிய காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளருமான றாஸிக் – ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுதிய திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே அவரிடம் நாம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான்… 2013ஆம் ஆண்டு வைத்திய அத்தியட்சகர் தாஸிம் விவகாரத்தில் அப்போது தலையிட்டு அவரைக் காப்பாற்றியது ‘ஜின்’களா?

தொடர்பான கட்டுரை: அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்