நாடாளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தது 30 வீதம் வேட்புமனு வழங்க வேண்டும்: நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை

🕔 July 12, 2021

லங்கையின் சகல தேர்தல் சட்டங்களும் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற குழுவில் பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் அதன் தலைவர் ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தலைமையில் கடந்த 08ஆம் திகதி கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் சகல தேர்தல்களுக்கும் ஒருமித்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவும், உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒரு குறிப்பிட்ட அளவைப் பேணுவதற்கான யோசனையை விசேட நாடாளுமன்றக் குழுவில் முன்வைப்பதற்கும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

தேர்தல் மற்றும் வாக்களிப்புத் தொடர்பான சட்டத்தை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருக்கும் யோசனைகளில், தேர்தல்களின் போது பொதுவான மற்றும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான விசேடமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பில் பெண்களுக்கு குறிப்பிட்ட கோட்டாவைப் பேணுவதை கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் இதன் ஊடாக பெண்கள் அரசியலில் இணைவதற்கான சூழலை ஏற்படுத்தல் என்பன அடங்குகின்றன.

இதற்கு மேலதிகமாக தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களால் தேர்தல் பிரசாரங்களுக்கு செலவுகளை மேற்கொள்ளும்போது சகலருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டை உருவாக்குதல் மற்றும் பொறுப்புக் கூறும் நிலைமைய ஏற்படுத்தல், நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 30 வீதம் வரை வேட்புமனுக்களை அதிகரித்தல் மற்றும் அனைத்து கட்சிகளினதும் தேசியப் பட்டியல்களில் பெண்களுக்கு 50 வீதத்தை உறுதிப்படுத்துவது போன்ற விடயங்களையும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் விசேட குழுவுக்கு முன்மொழியவுள்ளனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுலா திஸாநாயக, கீதா குமாரசிங்க, முதிதா பிரசாந்தி, டயானா கமகே மற்றும் பாராளுமன்றத்தின் பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானீ ரோஹனதீர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்