சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

🕔 July 11, 2021

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவ்வாறு விலகினாலும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எப்போதும் எமக்கு இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது” என தெரிவித்துள்ள அமைச்சர்; “ஐக்கிய தேசிய கட்சியையே அவர்கள் ஆதரித்தார்கள். இதுவே உண்மை கதை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியிடமிருந்து கிடைத்த ஆதரவை அங்கீகரித்து மதிக்கின்றோம். பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே அவர்களுக்கு சில ஆசனங்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் அவர்களால் இரண்டு மூன்று ஆசனங்களுக்கு மேல் வென்றிருக்க முடியாது.

தனிக்கட்சி என்ற வகையில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் முடிவெடுக்கலாம். அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கலாம் விரும்பினால் வெளியேறலாம். அதற்கு தடையேதும் இல்லை.

அந்த கட்சியை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதால், அவர்கள் வெளியேறினாலும் அது அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்காது” என அவர் மேலும் தெரிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்