தலிபான்களுக்கு பயந்து, தப்பியோடும் ஆப்கான் படையினர்: நேட்டோ படை வெளியேற்றத்தின் பின்னர், மாறும் கள நிலைவரம்

🕔 July 6, 2021
ஆப்கானிஸ்தான் படையினர்

லிபான்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தலிபான் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடக்கின்றன.

எஞ்சியிருக்கும் வெளிநாட்டுப் படையினர் எதிர்வரும் செப்டம்பருக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.

தலிபான்களுடன் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டுள்ளன. இதன்படி அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை என தலிபான் ஒப்புக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் ஆப்கன் ராணுவத்துடன் சண்டை நிறுத்தம் செய்து கொள்வதற்கு தலிபான்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தலிபான்களின் கட்டுப்பாட்டில் இப்போது ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

அவர்கள் நாள்தோறும் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் தலிபான்கள் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறையாகும். கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தீவிரமானால், போர் நடக்கும் இடங்களில் வாழும் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மத்திய ஆசிய நாடுகளை நோக்கி அகதியாக தஞ்சம் அடையலாம் என்கிற நிலையும் உருவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்