பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன

🕔 July 4, 2021

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராவதோடு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பசில் ராஜபக்ஷவின் கீழ், பல முக்கிய துறைகள் கொண்டு வரப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் வரும் சில நிறுவனங்களும் துறைகளும் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கும் அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சின் கீழுள்ள கொழும்பு துறைமுக நகரம், நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் வரும் முதலீட்டு அதிகார சபை மற்றும் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் வரும் சில துறைகளும் பசில் ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, இம்மாதம் 08 ம் திகதி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு வாரத்தின் பின்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர் பதவி ஏற்பார் எனவும் மேற்படி செய்தி தெரிவிக்கிறது.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைவார் என செய்திகள் வெளியானமைக்கு அரசாங்கத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருவதும், ஆளுங்கட்சிக்குள் அச் செய்தி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்