கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை
– பாறுக் ஷிஹான் –
கொரோனா தொற்று காரணமாக கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள்ஏற்பட்டால் பொறுத்துக் கொண்டு தமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சநதிப்பில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“எமது கல்முனை பிராந்தியம் கடந்த 02 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றது. எனினும் கொரோனா தொற்று எம்மிடையே மிக அதிகமாக பரவி வருகின்றது. இதனால் பல மரணங்கள் சம்பவித்துள்ளன. மருத்துவ அதிகாரிகள், சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தாலும் கொரோனா பரவல் அதிகரித்தே செல்லும் நிலையில், தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.
மக்களுக்கு அத்தியவசியமான சேவைகளை எமது சபை வழங்கி வருகின்றது. அதில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம் முக்கியமானது. ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட இச்சேவையானது அத்தியவசிய சேவையாக உள்ளபடியினால் அதை செய்ய வேண்டியது மாநகர சபையின் கடமையாக உள்ளது.
இச்சேவையை நாம் மிகவும் கிரமமாக செய்து வருகின்றோம்.
இதனை தேர்ச்சி பெற்ற நிர்வாகத்தின் கீழ் 06 வலயங்களாக பிரித்து மேற்கொண்டுள்ளோம். கல்முனையின் சனத்தொகையை பொறுத்தமட்டில் 01 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இருக்கின்றார்கள். இவர்களின் 120 தொன் திண்மக்கழிவு எடுக்கப்படுகின்றது.
இவை அனைத்தையும் கிரமமாக சேகரித்து துப்பரவு செய்து பள்ளக்காட்டுக்கு எடுத்து செல்கின்றோம்.
தற்போது 150 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் நிரந்தர ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் என குறைந்த ஊழியர்களே உள்ளனர். இவர்களில் 29 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேலைக்கு சமூகம் தர முடியாமல் உள்ளனர். ஏனைய ஊழியர்களை கொண்டே எமது திண்மக்கழிவு அகற்றலை செய்து கொண்டிருக்கின்றோம்.
தற்போது கழிவகற்றலை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றோம். திண்மக்கழிவகற்றலானது வீடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. அரச அலுவலகங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். இதன்போது எந்தவித கட்டணமும் அறவிடப்படாமல் தான் அனைத்து சேவைகளும் இடம்பெறுகின்றன. கல்முனை மாநகர சபையினர் இக்கட்டான சூழ்நிலையில் குறைந்த ஆளணியுடன் இச்சேவைகளை முன்னெடுத்துள்ளோம். எனவே திண்மக்கழிவகற்றலில் குறைபாடுகள் வந்தால் பொறுத்து கொண்டு எமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.