சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

🕔 November 25, 2015
Bandula - 0985சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் பிரபல்ய நிகழ்ச்சியான ‘முல்பிடுவ’ நிகழ்ச்சி பந்துல பத்மகுமாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அவை குறித்த விமர்சனைங்களும் இடம்பெறும்.

இலங்கைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த 12 வருடங்களாக இந்த நிகழ்ச்சி முதலிடத்தில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் பந்துல பத்மகுமார, குறித்த நிகழ்ச்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாகத் தெரிவித்து, அதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு சுவர்ணவாஹினி நிறுவனம் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என, பந்துல பத்மகுமார தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த ‘முல்பிடுவ’ நிகழ்ச்சியை தனது புலமைச்சொத்தாக அறிவிக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியிருந்தார். இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய அரசினை கடுமையாக விமர்சிக்கும் வகையில், இவர் ‘முல்பிடுவ’ நிகழ்ச்சியை நடத்திச் சென்றமையினாலேயே பணிநீக்கம் செய்யப்பட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாகவே பந்துல பத்மகுமார பணி நீக்கம் செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

ஆயினும், பத்மகுமார பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்