நடிகை விவககாரம்: அமைச்சர் சரத் வீரசேகர பதவியிலிருந்து விலக வேண்டுமென, ஆளுங்கட்சிக்குள் அழுத்தம்

🕔 June 6, 2021

டிகை பியுமி ஹன்சமாலி தொடர்பான சர்ச்சையை அடுத்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது பதவியில் இருந்து விலக வெண்டுமென கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

நடிகையை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சர் தலையிட்டதாகக் கூறப்படுவதால், அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, ஆளும் கட்சிக்குள் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதே கருத்து சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

நடிகை பியுமி தனிமைப்படுத்தல் நிலையத்துக்குப் புறப்படுவதற்கு முன்னர், தனது வீட்டிலிருந்து சில துணிகளைப் பெற உதவுவதில் மட்டுமே தலையிட்டதாகத் தெரிவித்து, அமைச்சர் வீரசேகர நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டார். எவ்வாறாயினும், நடிகையின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் தனது வழிமுறைகளைத் தாண்டி செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நடிகை பியுமி ஹன்சமாலியை அமைச்சர் வீரசேகர நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பண்டாரவளையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தின் பொறுப்பில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் கைத்தொலைபேசியை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதன்போது பஸ்ஸைத் திருப்பி கொழும்புக்குத் திரும்புமாறு குறித்த பொலிஸ் அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சில நபர்கள், அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களில் நடிகை பியுமியும் ஒருவராவார்.

இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்கு அனுப்பப்பட்டனர்.

இதன்போது அமைச்சர் சரத் வீரசேகர தலையிட்டு, நடிகை பியுமிக்கு உதவும் வகையில், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், அவர்கள் சென்ற பஸ் வண்டியை கொழும்பக்குத் திருப்புமாறு, அதிலிருந்து பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவுக்கு இணங்காமல், குறித்த பஸ் வண்டி – தனிமைப்படுத்தல் நிலையத்துக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஏசியன் மிரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்