கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

🕔 November 24, 2015
Mujibur Rahman - 095கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும், மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்பேரில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூலம் 1994 ஆம் ஆண்டிலிருந்து, நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்த முஜிபுர் ரஹ்மான், 2007 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.

இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட இவர், 24 ஆயிரம் வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவானார்.

எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகத்துக்காக முஜிபுர் ரஹ்மான் தொடர்ச்சியாய் குரலெழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, மீண்டும் மாகாண சபைக்கு தெரிவாகினார்.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 83, 804 வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டம் சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்