உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு

🕔 May 18, 2021

ந்தவிதமான குற்றமும் இழைக்காத தன்னை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்தும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.  

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 22 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிிசாட் பதியுதீன் எம்.பி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது சபையில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;

“கொரோனா இந்த நாட்டிலும் உலகத்திலும் அதிகரித்து வரும் நிலையில், நமது நாட்டிலும் மரண எண்ணிக்கை கூடி வருகின்றது. அரசாங்கம் தமது கடமையை சரியாகச் செய்து, நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என முதலில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இன்று என்னை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவார்களா? இல்லையா? என்பது கூட எனக்கு சந்தேகமாக இருந்தது. கடந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, என்னை அழைத்துச் செல்வதற்காக ‘ஆயத்தமாக இருங்கள்’ என்று கூறிவிட்டு, பிறகு அது மறுக்கப்பட்டது. என்னை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு நிச்சயம் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

என்னை குற்றவாளியாக்கி சிறைப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே இது இடம்பெற்றுள்ளது. இதுவரையில் என்னை எந்த நீதிமன்றத்துக்கும் கொண்டுசெல்லவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திலும் கூட எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. இரவோடிரவாக நான் தூங்கிக்கொண்டிருந்த வேளை, சுமார் ஒன்றரை மணியளவில் வீட்டுக்குள் புகுந்து, என்னை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

‘ஏதாவது பிடிவிறாந்து இருக்கின்றதா?’ எனக் கேட்டேன். இல்லை என்றனர். ‘அவ்வாறாயின் குற்றமிழைத்ததற்கான ஏதாவது சாட்சிகள் உண்டா?’ என அவர்களிடம் கேட்டேன். எதுவுமே சொல்லாமல் என்னைக் கைது செய்து, நான்காம் மாடிக்கு அழைத்துச் சென்றனர்.

நான் நீண்டகாலமாக இந்த நாடாளுமன்றில், தொடர்ச்சியாக பிரதிநிதியாக இருந்து வருகின்றேன். நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவரை அதுவும் சிறுபான்மைக் கட்சியொன்றின்  தலைவரை, எந்தவிதமான சாட்சியங்களுமின்றி கைது செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன்,  மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசராணை செய்யப் போவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். எந்தவிதமான குற்றமும் செய்யாத ஒருவரை, இவ்வாறு நான்காம் மாடியில் தடுத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனக் கேட்கின்றேன்.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அவ்வாறான குற்றங்களை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து, என்னை அங்கு ஆஜர்படுத்த வேண்டும். அல்லது நீதிபதிக்கு அவற்றை அனுப்பி, என்னைக் கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடைபெறாமல், கடந்த 22 நாட்களாக, இன்னும் நான் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்.

என்னை அழைத்து சென்ற பின்னர், ‘எனது அமைச்சின் செயலாளரின் பெயர் என்ன? மேலதிக செயலாளரின் பெயர் என்ன? அவர்களுடன் தொலைபேசியில் நீங்கள் பேசுவீர்களா?’ இவ்வாறுதான் விசாரித்தார்கள்.

என்னை தெரிவு செய்த மக்களும், எனது கட்சியின் ஆதரவாளர்களும், என்னை நேசிக்கும் அனைத்து மக்களும் இன்று வேதனையில் உள்ளனர். ஜனநாயகத்தை நேசிக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். இந்த நாட்டு ஜனாதிபதியிடம் நீங்கள் ஒன்றைக் கேட்க வேண்டும். உங்களிடம் இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயக வழியில், வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை, நாடாளுமன்றத்துக்கு தொடர்ச்சியாக ஐந்து தடவை தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, எந்தக் குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றத்தில் சுமத்தாமல், இவ்வாறு கைது செய்து தடுத்து  வைத்திருப்பதன் நோக்கம் என்ன? என்ற நியாயத்தைக் கேளுங்கள்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், சி.ஐ.டியினர் என்னை விசாரித்தனர். எனது அமைச்சு தொடர்பில் துருவித்துருவி கேள்வி கேட்டனர். கைத்தொழில் அபிவிருத்தி சபை தொடர்பிலும் வினவினர். மூன்று முறை என்னை விசாரித்துவிட்டு, அந்த விசாரணைகள் தொடர்பிலான கோவைகளை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தனர். சட்டமா அதிபர் திணைக்களமோ இதுவரையில் என்னைக் கைது செய்யுங்கள் என்று கூறவில்லை. ஏனெனில், அவ்வாறு கூறுவதற்கான எந்தக் காரணமும் திணைக்களத்திடம் இருக்கவில்லை.

யாரோ மதகுரு ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும், சந்தோஷப்படுத்துவதற்காகவும், சிறுபான்மை சமூகம் ஒன்றின் பிரதிநிதி ஒருவரை, அதுவும் கட்சியின் தலைவர் ஒருவரை இன்று அடைத்து வைத்துள்ளனர்.

இதுவரையில் என்னை பற்றி எந்தவிதமான அறிக்கைகளும் நீதிமன்றுக்கு அனுப்பப்படவில்லை. இதுவா இந்த நாட்டின் ஜனநாயகம்? என்னை தடுத்து வைப்பதன் மூலம், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நீங்கள் கூறும் செய்திதான் என்ன?

உலகத்திலே எந்த நாட்டிலும் இல்லாத ஒரு காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக்கொண்டு, இவ்வாறு பழிவாங்குகின்றனர். இந்தியாவில் கூட இவ்வாறான ஒரு மோசமான சட்டம் இல்லை.

எனவே, இந்த உயரிய சபையினூடாக நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நான் ஏதாவது குற்றம் செய்திருந்தால், பகிரங்கமாக என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தண்டனை பெற்றுத் தாருங்கள். நான் குற்றம் செய்திருப்பின் எனக்கு மரண தண்டனையைக் கூடத் தாருங்கள். ஆனால், நான் அணுவளவும் குற்றஞ்செய்யவில்லை. எனக்கு இந்தக் குண்டுத் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லை.

இது தொடர்பில், சி.ஐ.டி யினால் பலமுறை விசாரிக்கப்பட்டேன். அப்போது, பிரதி  பொலிஸ்மா அதிபராகவிருந்த தற்போதைய பொலிஸ்மா அதிபரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ‘றிசாட் பதியுதீன் குற்றமற்றவர்’ என அறிவித்திருந்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான ரவி செனவிரத்னவின் கையெழுத்திட்ட அறிக்கையையே அவர் தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் என் மீதான பத்துக் குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட்டு, நான் நிரபராதி என தெரிவுக்குழு தெரிவித்தது. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 68 பேர் கையெழுத்திட்டு, என்மீது பத்துக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

எனவே, என்னை பழிவாங்குவதற்காகவே, இப்போது காரணமின்றி கைது செய்து, என்னை தடுத்து வைத்துள்ளனர்” என்றார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments