‘பட்ஜெட்’ புதினங்கள்

🕔 November 21, 2015

Ravi - Budjet - 097
பு
திய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இதைச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சில சுவாரசியங்களைத் தொகுத்து வழங்குகின்றோம்.

* வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சுமார் நாலரை மணிநேரத்தினை நிதியமைச்சர் எடுத்துக் கொண்டார்.

* முன்னாள் நிதியமைச்சர் ரொனி டிமெல்லுக்குப் பின்னர் வரவு – செலவுத் திட்ட உரைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டவராக தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆவார்.

* எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் நேற்றைய வரவு – செலவுத் திட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

* வரவு – செலவுத் திட்டம் அடங்கிய ஆவணத்தினை பெட்டியொன்றினுள் வைத்து, எடுத்து வருவதே மரபாகும். ஆனால், கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ – இந்த மரபினைப் புறக்கணித்து வந்தார். ஆயினும், நேற்றைய தினம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மேற்படி மரபினைப் பின்பற்றியிருந்தார்.

* அமைச்சர் ராஜித சேனாநாயக்க, நேற்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

* நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பார்வையாளர் கலரியில் அமர்ந்து வரவு – செலவுத்திட்ட உரையை அவதானித்துக் கொண்டிருந்தார். எனினும், உரை நீண்டுகொண்டு சென்றமையினால், அவர் – சில அமைச்சர்களுடன் தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

* எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தாமதமாகவே சபைக்கு வந்தார்.

* நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தாமதமாக வருகை தந்த நிலையில், சற்று நேரம் சபையில் இருந்து விட்டு வெளியேறிச் சென்றார்.

* நேற்று பிற்பகல் 2.04 மணிக்கு வரவு – செலவுத் திட்ட உரை ஆரம்பமான போதும், பிற்பகல் 4.55 மணிக்குத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபைக்கு வந்தார். 25 நிமிடங்களின் பின்னர் சபையை விட்டு வெளியேறினார்.

* ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்கிற பாகுபாடின்றி சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வரவு – செலவுத் திட்ட உரையின் போது, நன்றாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்