விவாகரத்தக்கு தயாராகும் பில்கேட்ஸ் தம்பதி: முடிவுக்கு வருகிறது 27 வருட தாம்பத்திய வாழ்க்கை

🕔 May 4, 2021

லகின் நான்காவது பணக்காரர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள்.

உலக பணக்காரர் வரிசையில் நீண்ட வருடங்கள் முதலிடத்திலிருந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது உலகின் நான்காவது பணக்காரர். தன்னுடைய சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்காகச் செலவழித்து வந்தார்கள் பில் – மெலிண்டா கேட்ஸ் இணையினர். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் தொடக்கம், சிறிய தன்னார்வ அமைப்புகள் வரை எல்லாவற்றுக்கும் மில்லியன்களில் நன்கொடை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ‘நாங்கள் இணையராக இனி ஒரு வளர்ச்சியை அடைய முடியாது என நினைக்கிறோம். நிறையச் சிந்தித்து, இந்த உறவைப் பாதுகாத்துக் கொள்ள நிறைய முயற்சித்து அதன் பின்னரே நாங்கள் எங்கள் திருமண உறவை உடைக்க முடிவெடுத்துள்ளோம்’ என்று அவர்கள் தங்களின் பிரிவு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

மெலிண்டா 56 வயதானவர். 1987-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி புரிந்த போது பில்கேட்ஸ்-ஐ சந்தித்தார். பின்னர் 1994-ம் ஆண்டு இருவரும் ஹவாய் தீவில் திருமணம் செய்து கொண்டனர். ஜெனிஃபர், ஃபீபி, ரோரி என இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுவர் மெலிண்டா கேட்ஸ். 2016-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலிலும் இவர் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மெலிண்டா அதிகம் ஆர்வம் காட்டியது சமூகப் பணிகளில்தான்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம், போலியோ நோய் ஒழிப்புக்காக இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்த சமூகப் பணிகளுக்காக பில் – மெலிண்டா ஜோடிக்கு பல்வேறு சர்வதேச விருதுகளும் அங்கீகாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருமண வாழக்கையில் பிரிவதாக முடிவெடுத்திருக்கும் இந்த ஜோடி, இந்த சமூகப் பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘கடந்த 27 ஆண்டுகளில், மூன்று அற்புதமான குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். உலகின் எல்லா மனிதர்களும் ஒரு ஆரோக்கியமான, சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் அதற்காக ஒரு அடிப்படை கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கிறோம். எங்களின் அந்த குறிக்கோளில் நாங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், அதற்காக எங்கள் சமூகப் பணிகளை இணைந்தே செய்வோம். ஆனால், திருமண வாழ்க்கையில் இணைந்திருக்க முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

2000-ம் ஆண்டு துவங்கப்பட்ட பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அடிப்படை சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்திப் பணி செய்கிறது. இதன் நிதியிலிருந்து, கொவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 1.75 பில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் 34469 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மெலிண்டா எழுதிய ஒரு நினைவுக் குறிப்பில், ஒரு பிரபலமானவரின் மனைவியாக, மூன்று குழந்தைகளின் தாயாக வீட்டிலேயே இருப்பதன் சிக்கல்களைப் பகிர்ந்திருந்தார். ”என்னைச் சமமாக நடத்த அவர் பழக வேண்டும், அவருக்குச் சமமானவளாக நான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, இருவரும் இணைந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனில் பணி புரிவது அவர்களின் புரிதலை, உறவை மேம்படுத்தியிருக்கிறது எனவும் பகிர்ந்திருந்தார்.

2019-ம் ஆண்டு, அஸோஸியேடட் பிரஸ் -ற்கு அவர் அளித்த பேட்டியில், ” நானும் பில்லும் சமமானவர்கள். வேலையில், ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.

மெலிண்டா கேட்ஸ் ‘பிவோட்டல் வென்சர்ஸ்’ எனும் முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனம் முக்கியத்துவம் அளித்தது.

பெண்களுக்கான சம உரிமை, அவர்களுக்கான வேலை, சமூக மாற்றத்தில் அவர்களுக்கான பங்களிப்பு இவையெல்லாம் குறித்து வலுவான கருத்துக்கள் கொண்டவர் மெலிண்டா கேட்ஸ். சிறு வயதிலேயே நன்றாகப் படிக்கக் கூடியவர், எல்லாவற்றிலும் முதல் இடம் வாங்குபவர். உலகத்திற்கு கம்ப்யூட்டர் பழகாத காலத்திலேயே, ஒரு பெண்ணாக அவருக்கு இருந்த தடைகளையும் தாண்டி கம்ப்யூட்டர் பயின்றவர். இப்படித் தனி திறமைகள் பல கொண்டு, ஆளுமை நிறைந்த ஒரு பெண்ணாக இருந்த மெலிண்டா, பில் கேட்ஸ் என்ற மாபெரும் பிம்பத்தின் நிழலில் சற்று திணறியிருக்கலாம்.

குழந்தைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் தன்னுடைய வேலையை விட்டு இல்லத்தரசியாக வீட்டிலிருந்தது, தனக்கென ஒரு தனி அடையாளமும், அங்கீகாரமும் இல்லாதது அவரை பாதித்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. இவையெல்லாம் தான் இந்த பிரிவுக்கான அடித்தளமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

பிரிவது முடிவாக இருந்தாலும், அதை மிகக் கண்ணியமான முறையில் இருவரும் பேசிப் புரிந்துகொண்டு, தங்களின் சமூகப் பணிக்கு இடையூறு இல்லாமல், குழந்தைகளைப் பாதிக்காமல் கையாளுகிறார்கள். இந்த புதிய பாதையில் பயணிக்க எங்களுக்குச் சற்று தனிமையையும், இடைவெளியும் கொடுங்கள் எனப் பத்திரிகை ஊடகங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஒருவரையொருவர் வெறுத்து, நிந்தித்து, பழிகள் சுமத்தி பிரியும் பல்வேறு பிரபல ஜோடிகளுக்கு இடையே, பரஸ்பர மரியாதையோடு ஒரு நீண்ட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

Comments