தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை இனங்காண, குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

🕔 April 4, 2021

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.

இதற்கமைய, குறித்த குழுவுக்காக 15 உறுப்பினர்களை சபாநாயகர் தெரிவு செய்யவுள்ளார்.

06 மாத காலப்பகுதியில் குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாக யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 02 வாரங்களுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான புதிய சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இணக்கம் காணப்பட்டது.

சட்டத்தில் நிலவும் சில குறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காக குறித்த ஆளும் கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments