புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

🕔 March 11, 2021

லங்கையில் பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 05 வயதிலிருந்து 16 வயது வரை, அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்ற வேண்டும் என தாம் கூறுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யாத பாடசாலைகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“மதரஸா பாடசாலைகளை கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

நாட்டில் செயற்படும் 11 அடிப்படைவாத குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த அமைப்புக்களைத் தடைசெய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்