முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான 09 மாடிக் கட்டடத்தை, புத்த சாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம்

🕔 March 10, 2021

முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 மாடிகளைக் கொண்ட கட்டடம் மற்றும் காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.

தற்போது புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பல இடங்களில் நடத்திச் செல்வதால், அமைச்சு மற்றும் குறித்த நிறுவனங்களை ஒரு கட்டிடத்தில் நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

அதற்காக கொழும்பு 10, டீ.ஆர் விஸயவர்த்தன மாவத்தையில் முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 மாடிகளைக் கொண்ட கட்டடம் பொருத்தமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டிடம் மற்றும் குறித்த காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்ததும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களையும் குறித்த கட்டிடத்தில் தாபிப்பதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரான, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்