பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை

🕔 February 23, 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கொழும்பு – காலிமுகத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

மேற்படி விடயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அதில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தின் ஜனாஸாகளை (உடல்களை) எரிப்பதென்பது, பிராயச்சித்தம் தேட முடியாத வரலாற்றுத் துரோகமாகும்.

எனவே, இந்த அநியாய – அநாகரீகச் செயலில் இருந்து விடுபட்டு, கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்