ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

🕔 February 23, 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கெஹலியவிடம் கேட்டபோது; அந்த தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

பாகிஸ்தான் பிரதமரின் வருகை தொடர்பான முடிவுகள் இரு நாடுகளிலிருந்தும் அரசியல் ஆலோசனைக் குழுக்களால் எடுக்கப்படுகின்றன என்றும். அதில் அரசாங்கதுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அமைச்சர் கெஹெலிய மேலும் தெரிவித்தார்.

ஹக்கீம் மற்றும் றிசாட் ஆகியோருடனான சந்திப்பு மட்டுமன்றி, விளையாட்டு வளாகமொன்றுக்கு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தரும் நிகழ்வும், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கெஹலிய கூறினார்.

இன்று மாலை 4.30 மணியளவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளார். அவர் இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருப்பார்.

Comments