யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு

🕔 November 17, 2015
Hakeem+ Amb (japn) - 01
– ஜெம்சாத் இக்பால் –

லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, அமைச்சர் ஹக்கீமை நேற்று திங்கள்கிழமை முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.

ஜெனீவா தீர்மானங்களைப் பொறுத்தமட்டில் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் திருப்தியடைகின்றீர்களா என தூதுவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், கோர யுத்தத்தின் விளைவாக தமிழ், சிங்கள சமூகங்கள் மட்டுமல்லாது, இந்நாட்டு முஸ்லிம் சமூகமும் பாரிய உயிரிழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளானதாகவும், அவை பற்றி இலங்கைக்கு அடிக்கடி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட ஜப்பானிய விஷேடத் தூதுவர் அசூசி அகாஸி நன்கு அறிந்து வைத்திருந்தார் என்றும் கூறினார். தமது கட்சி ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பில் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் யுத்த காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை நிலை காலப்போக்கில் படிப்படியாக அகன்றுவருவதாக கூறிய அமைச்சர் இலங்கையர்களின் கல்வித்தரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார். குடும்பங்களில் நிலவிய வறுமையும், அறிவீனமும் கூட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவிற்கு இளைஞர்களை இட்டுச் சென்றதாக அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் முனைப்புக் காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ஹக்கீம், கிழக்கு மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்படும் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சிகளில் ஜப்பானிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வது பெரிதும் பயனளிக்கும் என்றார்.

கண்டி நகரையும், சூழவுள்ள பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் தூதுவருக்கு விளக்கிக் கூறினார். தம்முடன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, சரத் அமுனுகம, எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரின் ஒத்துழைப்பும் அதற்காக பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் சொன்னார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்களில் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சர் ஹக்கீம் பாராட்டினார். மற்றொரு ஜப்பானிய நிறுவனமான ஜெட்ரோ பற்றியும் அமைச்சரும், தூதுவரும் கருத்துப் பரிமாறினர்.

இந்தச் சந்திப்பில் ஜப்பானிய தூதரக பிரதி தலைமை பொறுப்பதிகாரி செல்வி அசாகோ ஓகய், முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் பங்குபற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்