உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

🕔 February 11, 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார்.

கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கூறியிருந்தார்.

பிரதமர் கூறியமைக்கு அமைய, அவ்விடயம் எப்போது வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எழுப்பிய கேள்விக்கே, ராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; “நாட்டில் பிரதமர் தீர்மானமொன்றை எட்டி, சபையில் அறிவித்ததன் பின்னர், அதனை மாற்றியமைப்பது சரியானதாக இருக்க முடியுமா” என கேள்வியெழுப்பினார்.

சுகாதார அமைச்சில் யார் இதனை முடக்குவது எனவும் இதன்போது அவர் கேட்டார்.

அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாகவும் ரஊப் ஹக்கீம் கூறினார்.

இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனவும், இது தற்போது ஜெனீவா வரை சென்றுள்ளதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்