புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து

🕔 February 11, 2021

னாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஒரேயொரு சொல்லை பிடித்துக்கொண்டு, அதற்கு கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், 20 க்கு கை உயர்த்திய இந்த சமூகத் துரோகிகள் இவ்வளவு காலமும் ‘மழை காலத்தில் புற்றுக்குள் ஒளிந்த பாம்பு’ போல் இருந்துவிட்டு, இப்போது படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷக்களை மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்றார்கள். பின்னர் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், அவர்களின் தலைமைகளுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிவிட்டு, அரசாங்கத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்தினார்கள்.

தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே, இவர்கள் பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, கோட்டாவை சர்வ வல்லமை பொருந்தியவராக மாற்றினார்கள். இவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த கேவலம் கேட்டவர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் எம்.பியாவதற்கு முன்னரேயே, ‘வென்ற பின்னர் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்’ என்று பகிரங்கமாக சொன்னார். கட்சியின் கொள்கைக்கு மாறாக இவர் கருத்து தெரிவித்தவர்.

புத்தளத்தில் ‘மரத்தில் ஒரு காலையும், மயிலில் மற்றொரு காலையும்’ வைத்துக்கொண்டு பொதுச் சின்னத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வந்த அலி சப்ரி எம்.பி, அடாத்தாகப் பிடித்து பறிபோகவிருந்த தனது கள்ளக் காணிகளை காப்பற்றுவதற்காக, தனது கட்சித் தலைமைக்கு மாறுபாடு செய்து, 20க்கு ஆதரவளித்தார். ஏனைய எம்.பிக்கள் அனைவரும் பக்கா டீலர்கள்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்