ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

🕔 February 7, 2021

ஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மட்டுமன்றி, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெனாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதைய தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்கூட்டி எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

திங்களன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதல்களுக்கு முன்னர் நபர்களைக் கைது செய்யத் தவறியவர்கள், தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பியவர்களைக் கைது செய்யத் தவறியமை மற்றும் முன்கூட்டிய முறையான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத கருத்துக்களை பரப்புவதற்காக வெளிநாட்டு நிதி பெற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேற்படி ஜனாபதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் சன்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிக்கை இதுவரை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, சட்டமா அபதிபர் திணைக்கள வட்டாரம் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டின் ஆணைக்குழு விசாரணைச் சட்டத்தின் கீழ், ஆணைக்குழு கண்டுபிடித்த விடயங்களை, பொறுப்பானவர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து ஜனாதிபதியிடம் பேராயர் மல்கம் ரஞ்சித் பேசியதாகவும், அறிக்கையின் உள்ளடக்கங்களை விரைவில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் சன்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஈஸ்டர் தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

Comments