பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போராட்டம்; தடைகளை மீறி தொடர்கிறது

🕔 February 3, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நடைபவனியில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை அடங்கலாக – அரச அடக்குமுறைகளை விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இந்த நடைபவனியை தடுக்கும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆயினும் அவற்றினைக் கடந்து நடைபவனி தொடர்ந்து வருகிறது.

முஸ்லிம்கள் ஆதரவு

தமிழ் தரப்பினர் ஆரம்பித்துள்ள இந்த நடைபவனிக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் – இந்த நடைபவனியில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்று வரும் முஸ்லிம்கள் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

நீதிமன்றத் தடை

இந்த நிலையில் மேற்படி நடைபவனி பேரணி நடைபெறுவதைத் தடுப்பதற்கான தடையுத்தரவை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம், கல்முனை நீதவான் நீதிமன்றம் மற்றும் களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்துள்ளன.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து, திருக்கோவில், கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களின் பொலிஸார், அந்தந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி என்பனவற்றை நடத்த நீதிமன்றங்கள்  தடைவிதித்துள்ளன.

இந்தத் தடையுத்தரவு பற்றிய அறிவிப்புக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட 32 பேரிடம் பொலிஸார் கையளித்தனர்.

“கொவிட் 19 தொற்று மிக வேகமாகப் பரவக் கூடிய இக்காலகட்டத்தில் மேற்படி செயலானது பொதுச் சுகாதாரத்துக்குப் பங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களின் உயிர், சுகாதாரம் என்பனவற்றுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு, மேற்படி நபர்களுக்கு கட்டளையிடப்படுகிறது” என நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments