கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு

🕔 February 2, 2021

கிழக்கு மாகாணத்தில் 07 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் மற்றும் பொத்துவில் உள்ளூராட்சி சபைகளுக்கு தவிசாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பொத்துவில் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, இம்மாதம் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு பொத்துவில் பிரதேச சபை மண்டபத்திலும், இறக்காமம் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, அதே தினத்தன்று பிற்பகல் 02.30 மணிக்கு இறக்காமம் பிரதேச சபை மண்டபத்திலும் நடைபெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, இம்மாதம் 11ஆம் காலை 09 மணிக்கு பிரசே சபை மண்டபத்திலும், ஏறாவூர் நகர சபைக்கான தலைவர் தெரிவு, அதே தினத்தன்று காலை 11 மணிக்கு நகர சபை மண்டபத்திலும், மண்முனை பிரதேச சபை தவிசாளர் தெரிவு, பிற்பகல் 02.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

மேற்படி சபைகளின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினை அடுத்து, அந்த சபைகளின் தவிசாளர்கள் பதவியிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments