ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

🕔 January 15, 2021

ஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர் வரும் 06 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

ஹிரு தொலைக்காட்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நாளிதழ் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதோடு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை ஆரம்பமாகும் தினத்திலிருந்து சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாகவே அவர் செயற்படுவார்.

அத்துடன் சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாக ஒரு வருடம் என்பது 08 மாதங்களாகவே கணக்கிடப்படுகின்றது.

இதற்கமையவே அவருக்கு இரண்டு வருடங்கள் 08 மாதங்கள் தண்டனைக்குரிய காலமாக காணப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கான சிறைத்தண்டனை ஆரம்பமான தினத்திலிருந்து 06 மாதங்களின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாகின்றது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 89 ஆவது பரிந்துரையில் தெளிவாக இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உயர் நீதிமன்றம் இந்த தீர்பினை வழங்கியுள்ளமையினால் அவருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும் முடியாது என்பதோடு மேன்முறையீடு செய்யவும் முடியாது.

அது மாத்திரமின்றி உயர்நீதிமன்றில் அளிக்கப்பட்டுள்ள நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையின் பின்னர் சுமார் 07 வருடங்களுக்கு தண்டனைக்குரியவரின் குடியியல் உரிமை ரத்தாகும்.

அதாவது 11 வருடங்களின் பின்னரே அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியும் என்பதோடு, குடியியல் உரிமையும் மீளக் கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறுவதென்ன?

இந்த நிலையில் நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாபாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் ரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 02 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக ரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 06 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 06 மாதங்கள் தண்டனையை அனுபவிக்கும் பட்சத்தில் அவருடைய பதவி, விருப்புவாக்கு பட்டியலில் அடுத்து உள்ளவருக்கு சென்றடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹவா தெரிவித்துள்ளார்.

Comments