கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்

🕔 December 23, 2020

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

பின்னர் நல்லாட்சிக் காலத்தின் போது இவருக்கும், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும் எதிராக 600 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக, வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் மேற்படி இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதையடுத்து 2017ஆம் ஆண்டு, நீதிமன்றம் இவர்களுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 லட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்த போதும் குறித்த தீர்ப்பினை எதிர்த்து மேற்படி இருவரும் மேன்முறையீடு செய்தனர்.

இதற்கிணங்க, கடந்த நொவம்பர் மாதம் 19ஆம் திகதியன்று, இவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து, இருவரையும் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்