அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

🕔 December 8, 2020

– அஹமட் –

னிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்தபோது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகம் 81 ரூபா 50 சதத்துக்கு வழங்கியுள்ள கோதுமை மாவினை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 85 ரூபா 50 சதத்துக்கு வழங்குகிறது.

164 ரூபாவுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ள பருப்பு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் 170 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிளகாய் தூள் 548 ரூபா எனும் விலையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ள போதிலும், அதனை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 660 ரூபாவுக்கு வழங்குகிறது.

இதேபோன்று மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை பொதியிடுவதற்கான பைகளுக்குரிய (சொப்பின் பேக் மற்றும் உரப்பை) செலவு சுமார் 35 ரூபா என அக்கரைப்பற்று பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இதற்காக 58 ரூபாவை அறவிடுகிறது.

அதாவது பொருட்களை பொதியிடுவதற்கான உரப்பையை அக்கரைப்பற்று பிரதேச செயலகம் 25 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ள அதேவேளை, அந்த உரப்பையை 36 ரூபாவுக்கு தாம் கொள்வனவு செய்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கணக்காளர் ஏ.எல். றிபாஸ் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், 05ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக – அக்கரைப்பற்று பிரதேச செயலகம் தயாரித்துள்ள விலைப்பட்டியலுடன் ஒப்பீடு செய்யும் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் விலப்பட்டியல் 10 லட்சத்து 79 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைக் கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தத் தொகை இன்னும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, 05 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இரண்டு தடவை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்போதும் இதே விலையில் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்குமாயின், 21 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமான பெற்றுக்கொள்ளப்படும்.

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியில், குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியமை அரச அதிகாரிகளின் கடமையாகும்.

அதை விடுத்து, மக்களுக்கு இவ்வாறு அதிக விலையில் நிவாரணப் பொருட்களை வழங்குவதாகக் கூறுகின்றமை மிகப்பெரும் அநீதியாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள 9107 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 91 மில்லியன் (09 கோடி 10 லட்சம்) ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பகுதிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளுக்கு அரசாங்க நிதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் பொருட்களும் அதற்கான விலைகளும்

அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களின் விலைப்பட்டியல் – ஒப்பீடு

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Comments